
ரணிலின் வழக்கு விசாரணை இன்று : பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு !
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கு இன்றையதினம் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் ரணில் விக்ரமசிங்க, கடந்த 22ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவருக்கு எதிரான வழக்கு விசாரணை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த வழக்கில் சட்டமா அதிபரை பிரதிநிதித்துவப்படுத்தும் கூடுதல் மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ், நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைக்க உள்ளார்.
மேலும், ரணில் விக்ரமசிங்க சார்பில் சுமார் 300 பேர் கொண்ட வழக்கறிஞர்கள் குழு முன்னிலையாக உள்ளது.
அத்துடன், எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் முன்னிலையாவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோட்டை நீதவான் நீதிமன்றத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பொலிஸாரால் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், இன்றையதினம் பொது அமைதியைப் பேணுவதற்காக அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் சிறப்பு பாதுகாப்புத் திட்டத்தை செயற்படுத்துமாறு பொலிஸ் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

