
எப்ஸ்டீன் விவகாரம் ; உலக பொருளாதார மன்ற தலைவர் பதவி விலகல்
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை பாலியல் சுரண்டலுக்காக கடத்தி பணக்காரர்களுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு உள்ளான அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன், 2019 ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அதே ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் திகதி தனது சிறைக் கூடத்தில் தற்கொலை செய்துகொண்டார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில், எப்ஸ்டீன் தொடர்பான வழக்குகள் கட்டங்கட்டமாக வெளியிடப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட கோப்புகளில் டொனால்ட் டிரம்ப், பில் கேட்ஸ், எலோன் மாஸ்க், பிரின்ஸ் ஆண்ட்ரூ உள்ளிட்ட பல பிரபலங்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், உலக பொருளாதார மன்றத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான போர்கே பிரென்ட் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
எப்ஸ்டீனுடன் வணிக ரீதியான இரவு விருந்துகளில் கலந்துகொண்டதாகவும், மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி தொடர்பு வைத்திருந்ததாகவும் குற்றம் சட்டப்பட்டதைத் தொடர்ந்து, விசாரிக்க தனிப்பட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
இதையடுத்து, 2017 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்த போர்கே பிரென்ட் தனது தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார்.
தனது விலகல் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை, “உலக பொருளாதார மன்றம் எந்த இடையூறுமின்றி தொடர்ச்சியாக செயல்பட வேண்டும் என்பதற்காகவே இதன் முடிவை எடுத்தேன். கடந்த எட்டரை ஆண்டுகளாக இந்தப் பொறுப்பில் பணியாற்றியதில் திருப்தி அடைகிறேன்” என தெரிவித்துள்ளார்.

