இலங்கை அணிக்கு வலுக்கும் எதிர்ப்பு !அணித்தலைவர் தசுன் சானக்க நீக்கப்படுவாரா ?

இலங்கை அணிக்கு வலுக்கும் எதிர்ப்பு !அணித்தலைவர் தசுன் சானக்க நீக்கப்படுவாரா ?

T20 உலகக் கிண்ண தொடரை இந்தியாவுடன் இணைந்து நடத்தும் நாடான இலங்கை அணி, சூப்பர் 8 சுற்றோடு வெளியேறியது ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

சொந்த மண்ணில் இலங்கை அணி கிண்ணத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தத் தோல்வி அணியின் நிர்வாகத்தை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் அணித்தலைவர் தசுன் சானக்க மற்றும் தேர்வுக்குழுவினரை அதிரடியாக நீக்க வேண்டும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தொடரின் ஆரம்பத்தில் இலங்கை அணி மிகச் சிறப்பாக செயல்பட்டது.

லீக் சுற்றில் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பதிவு செய்து
அவுஸ்திரேலியா அணியையும் வீழ்த்தி வலுவான நிலையில் இருந்தது

ஆனால், சூப்பர் 8 சுற்றுக்கு வந்ததும் நிலைமை தலைகீழாக மாறியது.

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான மிக முக்கியமான போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியதால், அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை இலங்கை அணி இழந்தது.

குறிப்பாக, இங்கிலாந்துக்கு எதிராக 147 ரன்களையும், நியூசிலாந்துக்கு எதிராக 169 ரன்களையும் துரத்த முடியாமல் இலங்கையின் பேட்டிங் வரிசை சரிந்தது தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

அதேசமயம், அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களான சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா ஆகியோர் காயம் காரணமாக விலகியது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது.

இந்தத் தோல்வியைத் தொடர்ந்து இலங்கை அணியில் முழுமையாக மாற்றம் செய்யவேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.

ஏற்கனவே அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா, இந்தத் தொடர் முடிந்ததும் பதவியிலிருந்து விலகுவதாக ஜனவரி மாதமே அறிவித்திருந்தார்.

இதனிடையே , அணியின் தோல்வி குறித்துப் பேசிய அணித்தலைவர் தசுன் சானக்க, வெளிப்புறத்தில் இருக்கும் எதிர்மறையான சூழலே தோல்விக்குக் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாங்கள் நேர்மறையான எண்ணத்துடன் விளையாட முயன்றாலும், வெளியில் நடக்கும் எதிர்மறையான விமர்சனங்கள் எங்களைப் பாதிக்கின்றன. இது இலங்கை கிரிக்கெட்டிற்குப் பேரிழப்பாகும்.

மைதானத்திற்கு வெளியே மைக்குகளை வைத்துக்கொண்டு, போட்டியைப் பார்க்காதவர்கள் கூட எங்களைப் பற்றித் தவறாகப் பேசுகிறார்கள்.

ஏன் இந்த எதிர்மறையான கருத்துகளைப் பரப்புகிறீர்கள்? எதிர்கால வீரர்களின் நலன் கருதி, அரசாங்கம் இதில் தலையிட்டு இத்தகைய எதிர்மறையான விமர்சனங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

அப்போதுதான் வீரர்களின் மனநலம் பாதுகாக்கப்படும்” என்று தசுன் சானக்க வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )