
கற்றாலைக்கு எதிராக 33ஆவது நாளாக தொடரும் போராட்டம்
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (04) 33 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலய பங்கு சபை மற்றும் பங்கு மக்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இளையோர் மற்றும் மக்கள் இணைந்து குறித்த போராட்டத்தை சுழற்சி முறையில் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த போராட்டத்திற்கு நாளாந்தம் பல்வேறு கிராம மக்கள்,வர்த்தகர்கள்,பொது அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.

இதன் போது மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார், புனித செபஸ்தியார் பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை கிறிஸ்து நாயகம் அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் ,அருட்தந்தை விக்டர் சோசை அடிகளார், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் என பலர் கலந்து கொண்டனர்.


