
இந்த ஆண்டில் இன்றுவரை 96 துப்பாக்கிச் சூட்டுகள் 50 பேர் பலி 53 பேர் காயம்
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 96 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த சம்பவங்களில் 50 பேர் கொல்லப்பட்டதுடன் 53 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த 12 மணி நேரத்தில், நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற 4 துப்பாக்கிச் சூடுகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
கடந்த 12 மணி நேரத்தில் முதல் துப்பாக்கிச் சூடு நேற்று இரவு 11.45 அளவில் கிராண்ட்பாஸில் இடம்பெற்றது .
இந்த சம்பவத்தில் ஹேஷான் சாலிந்த புஷ்பகுமார என்ற 27 வயது இளைஞர் கொல்லப்பட்டார்.
தொலைபேசி மூலம் குறித்த நபரை சம்பவ இடத்திற்கு அழைத்து இந்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அவர் எந்த குற்றப் பின்னணியும் இல்லாத நபர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை 1.40 அளவில் மருதானையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலை விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காயமடைந்த நபர் பஞ்சிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய செந்தில் மோகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் பஞ்சிகாவத்தையைச் சேர்ந்த நெவில் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் நெருங்கிய சகா எனவும் இந்த துப்பாக்கிச் சூடு கெசல்வத்தே கவி என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை நீர்கொழும்பு குட்டித்துவ பகுதியில் மற்றொரு துப்பாக்கிச் சூடு
இன்று அதிகாலை 1.30 அளவில் மேற்கொள்ளப்பட்டது.
அங்குள்ள ஒரு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
9 MM துப்பாக்கியால் ஒரே ஒரு தடவை துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் துப்பாக்கிச் சூடு தனிப்பட்ட தகராறின் விளைவாக நடந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இன்று காலை சுமார் 9:45 அளவில் அலுபோமுல்ல சந்தகலவத்த பகுதியில் கடை உரிமையாளரான பெண் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை,என தெரிவிக்கப்பட்டுள்ளது.

