
நிட்டம்புவ பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற வேன் மீது துப்பாக்கிச்சூடு ; மூவர் கைது
நிட்டம்புவவில் பொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன் வேனில் பயணித்த மூன்று பேரை பொலிஸார் இன்று (01) கைது செய்துள்ளனர்.
கம்பஹா பொலிஸ் மோட்டார் சைக்கிள் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் உட்பட அதிகாரிகள் குழு, நிட்டம்புவ – கட்டுநாயக்க வீதியில் உதம்விட சந்திப்பில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, வேயங்கொடையிலிருந்து நிட்டம்புவ நோக்கி சந்தேகத்திற்கிடமான முறையில் வேன் ஒன்று பயணித்துள்ளது.
வேனை நிறுத்துமாறு சைகை செய்தபோதும், அதனை பொருட்படுத்தாமல் குறித்த வேன் தொடர்ந்து சென்றுள்ளது.
பின்னர், பொலிஸார் வேனைத் துரத்திச் சென்று ரி – 56 துப்பாக்கியால் வேனின் முன் மற்றும் பின் வலது சக்கரங்களில் சுட்டுள்ளனர்.
இதனையடுத்து, வேனில் பயணித்த மூன்று பேரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் அதிக அளவில் குடிபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதி லெல்லொபிட்டிவைச் சேர்ந்தவர் என்றும், ஏனைய இருவரும் இரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர்களென்றும் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதா? என்பதைப் பரிசோதிக்க சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்களை அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

