பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய பெண்ணுக்கு விளக்கமறியல்

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய பெண்ணுக்கு விளக்கமறியல்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) ஒருவரின் சகோதரி எனத் தவறாகக் கூறி, போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர், கம்பஹா நீதவான் நீதிமன்றத்தால் நவம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டுகொட – உடுகம்போல பிரதேசத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், சந்தேகநபர் தனது வாகனத்தை நிறுத்துமாறு போக்குவரத்து அதிகாரிகள் வழங்கிய சமிக்ஞையை மதிக்காமல் சென்றதாகத் தெரியவந்துள்ளது.

பின்னர், அவர் உடுகம்போல சந்தியில் நிறுத்தப்பட்டபோது, அங்கு பொலிஸ் அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தின் போது, “தான் ஒரு உயர் பொலிஸ் அதிகாரியின் சகோதரி” எனக் கூறிய அவர், பின்னர் அந்தக் கூற்று பொய்யானது என விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டது.

பொலிஸ் அறிவுறுத்தல்களை மீறி வாகனத்தை இயக்கிய அவர், இறுதியில் மினுவாங்கொடை பொலிஸ் சந்திக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபருக்கு எதிராக அபாயகரமான மற்றும் கவனக்குறைவான வாகனம் ஓட்டுதல், பொலிஸ் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படியாமை, மற்றும் அரசு ஊழியரின் உத்தியோகபூர்வ கடமைக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அவர் நவம்பர் 1ஆம் திகதி கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதவான் அவரை நவம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )