
திருகோணமலை புத்தர் சிலை பாதுகாப்பு காரணங்களுக்காகவே அகற்றப்பட்டது -அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவிப்பு
திருகோணமலை கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையின் வளாகத்திற்குள் அனுமதி பெறாது சட்டவிரோதமான முறையில் வைக்கப்பட்டதாக கூறப்படும் புத்தர் சிலை பாதுகாப்பு காரணங்களுக்காகவே அகற்றப்பட்டதாகவும் அது இன்று காலை மீண்டும் அதே இடத்தில வைக்கப்படுமெனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (17) பாராளுமன்றில் அறிவித்தார்.
கரையோர பாதுகாப்பு திணைக்களம் இது தொடர்பில் ஏற்கனவே சில நடவடிக்கைகளை எடுத்திருந்தது.எனவே இந்த பிரச்சினையில் சட்ட நிலைமை குறித்து நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் புத்தர் சிலை அந்த இடத்தில் நிறுவ உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையின் வளாகத்திற்குள் நேற்று முன்தினம் இரவு புத்தர் சிலையை வைப்பதற்கான ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
பெயர்ப்பலகை நடப்பட்டு, கட்டுமானப் பொருட்கள் இறக்கப்பட்டு கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதனையடுத்து அங்கு சற்று பதற்றமான சூழல் உருவாகியது .
குறித்த சட்டவிரோத கட்டுமானப்பணிகள் தொடர்பாக கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால் திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனை அடுத்து குறித்த கட்டுமான பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக நீதிமன்றில் பொலிஸாரினால் வழக்கும் தொடரப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை புத்தர் சிலையை பெரும் பதற்றத்துக்கு மத்தியில் அகற்றிய பொலிஸாரின் கன்னத்தில் பிக்கு ஒருவர் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் புத்தர் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து நேற்றிரவு திருகோணமலையில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

