மக்களின் சுகாதார தரத்தை மேம்படுத்துவதற்கு 09 புதிய திட்டங்கள்

மக்களின் சுகாதார தரத்தை மேம்படுத்துவதற்கு 09 புதிய திட்டங்கள்

மக்களின் சுகாதாரத்தின் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு புதிய திட்டங்களைத் ஆரம்பிப்பதற்கான அவசியம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய அடுத்த ஆண்டுக்கான (2026) வரவுசெலவுத் திட்டத்தில், அரசாங்க முதலீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள சுகாதாரத் துறையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் புதிய முயற்சிகளை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்து, அரசாங்க முதலீட்டுக் குழுவினால் சுகாதாரத் துறையில் பல புதிய திட்டங்கள் அரசாங்க முதலீட்டுத் திட்டத்தில் சேர்ப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இன்று (18) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.

அதன்படி, இந்தத் திட்டங்களில் 2026 ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளின் மூலம் நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படும் பின்வரும் 09 திட்டங்களையும் அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.

• தேசிய வாய்ச்சுகாதார மதிப்பீடு – 2025/2026

• உத்தேச சத்திரசிகிச்சை, இழையொளி அகநோக்கு (Endoscopy) அலகு மற்றும் இதய – தோள்பட்டை முன் சத்திரசிகிச்சை நோயாளர் விடுதியை நிர்மாணிப்பதற்காக குருநாகல் போதனா மருத்துவமனையிலுள்ள நான்கு மாடிக் கட்டிடத்தை விரிவாக்கம் செய்தல்

• மாத்தளை மாவட்ட மருத்துவமனையின் சத்திரசிகிச்சை மற்றும் கதிரியக்கவியல் வசதிகளுடன் கூடிய மகப்பேற்று அலகுக்கான ஐந்து மாடிக் கட்டிடத்தை நிர்மாணித்தல்

• மஹரகம வாய்ச்சுகாதார சேவைகள் நிறுவனத்திற்கான வெளிநோயாளர் பிரிவு மற்றும் விசேட அலகுடன் கூடிய ஐந்து மாடிக் கட்டிடத்தை நிர்மாணித்தல்

• தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சியல் தொடர்பான நிறுவனத்தின் ஐந்து மாடிக் கட்டிடத்தை நிர்மாணித்தல் (கொழும்பு சட்ட மருத்துவ அலுவலகத்திற்கான)

• அநுராதபுரம் போதனா மருத்துவமனையின் திடீர் விபத்து, அவசர சிகிச்சை தொடர்பான சேவைகளுக்கான கட்டிடத்தொகுதி கட்டம் – I மற்றும் கட்டம் – II இனை நிர்மாணித்தல்

• அநுராதபுரம் போதனா மருத்துவமனையின் விசேட நிபுணத்துவ மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ விடுதிகளை நிர்மாணித்தல்

• மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கதிர் இயக்கவியல் அலகை விரிவுபடுத்தல்

• இலங்கை தேசிய மருத்துவமனையின் தேசிய இதய நிலையத்தை நிர்மாணித்தல்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )