
போதைப்பொருள் வழக்கில் கைது ; பன்னல பிரதேச சபை முன்னாள் உறுப்பினரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்
போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பன்னல பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தி முன்னாள் உறுப்பினரின் கட்சி உறுப்புரிமை உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தனது X சமூக வலைதளக் கணக்கில் வெளியிட்ட பதிவில், இந்தத் தீர்மானம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட பிரச்னையைப் பற்றி மேலதிக நடவடிக்கைகளை எடுக்க கட்சி உட்புற விசாரணை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (20) தென் கடற்பகுதியில் போதைப்பொருட்களுடன் மீன்பிடிப் படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியதையடுத்து, ஒருவரை பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்ததுடன், அவர் பன்னல பிரதேச சபையின் இமச முன்னாள் உறுப்பினர் என பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
இலங்கை கடற்படையினரால் குறித்த நெடுநாள் மீன்பிடிப் படகும் அதில் இருந்த ஆறு மீனவர்களும் தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு நேற்று மாலை கொண்டு வரப்பட்டனர்.
பாதுகாப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடற்படை மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில், அந்தப் படகிலிருந்து பெருமளவு போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
கண்டுபிடிக்கப்பட்ட சரக்குகளில் 5 பைகளில் 100 பொதிகளாகப் பொதியப்பட்ட 115 கிலோவுக்கும் மேற்பட்ட ஹெரோயின், மேலும் 13 பைகளில் 200 பொதிகளாகப் பொதியப்பட்ட 261 கிலோவுக்கும் மேற்பட்ட ஐஸ் போதைப்பொருளும் அடங்கும்.

