
கடுகண்ணாவையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்வு ,கணேதென்ன சந்தி-கடுகண்ணாவ வீதி தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில் தொடரும் மீட்பு நடவடிக்கை
கடுகண்ணாவ கணேதென்ன நிலச்சரிவில் சிக்கிய மேலும் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன
சம்பவம் இடம்பெற்ற போது ஒருவர் உயிரிழந்த நிலையில் இதுவரையில் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 9.00 மணியளவில் கடுகண்ணாவ கீழ்ப்பிரிவு கணேதென்ன பகுதியில் உள்ள கடை ஒன்றின் மீது மண் மற்றும் பாறைகள் உருண்டு விழுந்ததில் ஏற்பட்ட அனர்த்தத்தில் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களைத் தேடும் பணி பாரிய அளவில் தொடங்கப்பட்டது.
மீட்கப்பட்ட நான்கு பேர் தற்போது மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கேகாலை மாவட்ட செயலாளர் ஜகத் ஹேரத், அப்பகுதியில் நிலவும் ஆபத்தான சூழ்நிலை காரணமாக, நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
கணேதென்ன சந்தி-கடுகண்ணாவ வீதி தற்காலிகமாக நாளை மாலை வரை மூடப்பட்டுள்ளது..
கொழும்பிலிருந்து கண்டிக்கு செல்லும் வாகனங்கள் ரம்புக்கன-கலகெதர வீதியை பயன்படுத்துமாறும் , கண்டியிலிருந்து கொழும்புக்குச் செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதைகளில் செல்லவும் போலீசார் அறிவுறுத்தினர்.
கம்பளைக்கும் கொழும்புக்கும் இடையிலான வாகனங்கள் மாவனெல்ல-ஹெம்மாட்டகம வழியாக திருப்பி விடப்படுகின்றன,
அதே வேளை , கொழும்பு-கண்டி போக்குவரத்து அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

