
கண்டி கடுகண்ணாவ நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்னிக்கை 6ஆக உயர்வுமீட்பு பணிகள் நிறைவடைந்ததாக அறிவிப்பு
கடுகண்ணாவ கீழ்ப்பிரிவு கணேதென்ன பகுதியில் இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்த சம்பவத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர், மேலும் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 9.00 மணியளவில் கடுகண்ணாவ கீழ்ப்பிரிவு கணேதென்ன பகுதியில் உள்ள கடையொன்றின் மீது மண் மற்றும் பாறைகள் உருண்டு விழுந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டது .
சம்பவம் இடம்பெற்ற உடனேயே, இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது,
மேலும் இதற்காக இராணுவப் படையினரின் குழுவை அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்க இராணுவம், பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய நிவாரணக் குழுக்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து பாரிய மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, கணேதென்ன பகுதியிலிருந்து கண்டி-கொழும்பு பிரதான வீதி நாளைவரை முற்றிலுமாக மூடவும் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
இதன் விளைவாக, அந்தப் பகுதி வழியாகச் செல்லும் வாகன சாரதிகளுக்கு மாற்று வீதிகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது .

