
ரசிகர்களுக்காக சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன்
‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் விஜய், இயக்குநர் எச். வினோத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் உரையாற்றிய நடிகர் விஜய், மலேசியாவை இலங்கைக்குப் பிறகு அதிகமான தமிழ் மக்கள் வசிக்கும் நாடாகக் குறிப்பிட்டார். சினிமாவில் நடிக்க வந்தபோது ஒரு சிறிய மணல் வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை மட்டுமே இருந்ததாகவும், ஆனால் ரசிகர்கள் தமக்கு ஒரு பெரிய கோட்டையே கட்டிக் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
33 ஆண்டுகளாக ரசிகர்கள் தமக்கு அளித்த அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்த விஜய், அடுத்த 33 ஆண்டுகளில் அந்த அன்பைத் திருப்பிக் கொடுக்கப் போவதாக உறுதியளித்தார்.
தமக்கு ஏதாவது நேர்ந்தால் ரசிகர்கள் தியேட்டர் வாசலில் வந்து நிற்பார்கள் என்றும், அதேபோல் ரசிகர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் அவர்களது வீட்டு வாசலில் தாம் நிற்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.
ரசிகர்களுக்காக சினிமாவையே விட்டுக்கொடுப்பதாக கூறிய விஜய், வெறும் நன்றி சொல்லாமல், நன்றிக் கடனை முழுமையாக தீர்த்துவிட்டுத்தான் போவேன் என உருக்கமாக பேசினார்.
மேலும், வாழ்க்கையில் வெற்றி பெற நண்பர்களைவிட வலுவான எதிரி அவசியம் என்றும், வலுவான எதிரி இருந்தால் மட்டுமே ஒருவர் மேலும் வலிமையடைவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தாம் தனியாக வருவாரா அல்லது அணியாக வருவாரா என்ற சமீபத்திய விவாதத்திற்கும் பதிலளித்த விஜய், 33 ஆண்டுகளாக மக்களோடுதான் இருந்துவருகிறேன்; அதுவே ஒரு அணிதான் என தெரிவித்தார்.
விஜயின் இந்த உரை விழாவில் கலந்துகொண்ட ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

