தாய்லாந்து – கம்போடியா எல்லை மோதல் ; புதிய போர் நிறுத்த ஒப்பந்தம்

தாய்லாந்து – கம்போடியா எல்லை மோதல் ; புதிய போர் நிறுத்த ஒப்பந்தம்

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நகரின் உரிமை தொடர்பாக நீண்ட காலமாக நிலவி வரும் முரண்பாடு காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து இரு தரப்பினராலும் கடுமையான போர் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு, ராணுவ மோதல் வெடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்ட நிலையில், ஐந்து நாள் சண்டைக்குப் பின்னர் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் எல்லைப் பகுதியில் பதற்றம் தணிந்திருந்த போதிலும், கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் மோதல்கள் ஆரம்பமானதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், இரு நாடுகளும் புதிய போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எல்லைப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக நீடித்த சண்டை முடிவுக்கு வந்துள்ளது.

ஜூலை மாதம் நடைபெற்ற மோதலின் போது 18 கம்போடிய ராணுவ வீரர்கள் தாய்லாந்து படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை 72 மணி நேர போர் நிறுத்தத்திற்குப் பிறகு விடுவித்து திருப்பி ஒப்படைக்க வேண்டும் என தாய்லாந்து நிபந்தனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இம்மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் அழுத்தத்தின்பேரில் மலேசியா நடுநிலையாளர் ஆக செயல்பட்டு, ஜூலை மாத போர் நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், கம்போடியாவில் அமைந்திருந்த விஷ்ணு சிலை ஒன்றை தாய்லாந்து இடித்து தள்ளியதாக கூறப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காகவே அந்தச் சிலை அகற்றப்பட்டதாக தாய்லாந்து விளக்கம் அளித்தது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )