
வங்கதேச முன்னாள் பிரதமர் காலமானார்
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாதக் கட்சியின் (BNP) தலைவருமான கலிதா ஜியா (80) இன்று காலமானார்.
இதை அவரது கட்சி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இதயம் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக கடந்த மாதம் 13-ம் திகதி டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிறப்பு மருத்துவர்கள் குழுவின் தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார்.
இருப்பினும், அவரது உடல்நிலை மிக மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
ஏற்கனவே நீரிழிவு, கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு, இதய கோளாறு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளால் கலிதா ஜியா அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை நாளுக்கு நாள் கவலைக்கிடமாக மாறி வந்தது.
மேல் சிகிச்சைக்காக அவரை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டும் என அவரது கட்சியினர் வலியுறுத்தி வந்த நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. கலிதா ஜியாவின் மறைவு வங்கதேச அரசியலில் பெரும் இழப்பாக கருதப்படுகிறது.

