
மன்னார் நீதவான் நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் அனுமதி
மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் முன் கடந்த ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க மன்னார் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
முன்னர் அடம்பன் பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு சம்பவத்திலும் இந்த சந்தேக நபருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்ததால், இந்த விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது
அத்துடன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேக நபரை கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்திருந்தது .
அந்தக் காலம் நேற்று (02) பிற்பகல் 1 மணிக்கு முடிவடையவிருந்ததால், சந்தேக நபர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சந்தேக நபர் தொடர்பாக மேலும் விசாரணைகள் நடத்தப்படவிருப்பதால் அவரை 90 நாட்கள் தடுத்து வைக்க நீதிமன்றத்திடம் , குற்றப் புலனாய்வுத் திணைக்களம்அனுமதி கோர நடவடிக்கை எடுத்தது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 9 இன் படி, ஒரு சந்தேக நபரை 90 நாட்கள் தடுத்து வைக்க பாதுகாப்பு அமைச்சின் ஒப்புதல் பெற வேண்டியது கட்டாயமாகும்.
இதற்கமைய பாதுகாப்பு அமைச்சிடமிருந்து பிற்பகல் 1 மணி வரை ஒப்புதல் கிடைக்காததால், மன்னார் நீதிமன்றம் சந்தேக நபரை 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
பின்னர் பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதியிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இதனையடுத்து சந்தேக நபரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க மன்னார் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.

