
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட நபர் சடலமாக மீட்பு
அம்பாறை மாவட்டம் ஒலுவில் ஆத்தியடிக்கட்டு ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் முதலை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில், அவரது சடலம் இன்று (5) மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (4) மாலை, ஒலுவில் பகுதியில் உள்ள ஆற்றில் மூவர் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென முதலையொன்று குறித்த நபரை இழுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக அவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.
சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. நீர்மட்டம் அதிகரித்ததும், இருள் சூழ்ந்த நிலையிலும் நேற்று இரவு 10 மணி வரை தேடுதல் பணிகள் தொடர்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இன்றைய தினம் இரண்டாவது நாளாகவும் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், காணாமற்போன நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் ஒலுவில்-1, அஸ்ரப் நகர்-12 பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த தேடுதல் நடவடிக்கைகளில் ஒலுவில் பகுதி பொதுமக்கள், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர், சாய்ந்தமருது ஜனாசா நலன்புரி மக்கள் பேரவை, பொலிஸ் உத்தியோகத்தர்கள், கடற்படை பிரிவினர் மற்றும் அல்-உஸ்வா சம்மாந்துறை ஜனாசா அமைப்பினர் ஆகியோர் இணைந்து பங்கேற்றிருந்தனர்.
மேலும், மீட்கப்பட்ட சடலத்தின் மீதான மரண விசாரணை, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளின் பேரில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ. எச். அல்-ஜவாஹிர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. முதலை தாக்குதலே மரணத்திற்குக் காரணம் என உறுதி செய்யப்பட்டதையடுத்து, சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

