
மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை வெள்ளம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் புலிபாய்ந்தகல் பிரதான வீதியை ஊடறுத்து வெள்ள நீர்பாய்ந்து வருவதனால் அவ் வீதியுடனான தரை வழிப்போக்குவரத்து தடைபட்டுள்ளதுடன் அவ்வீதியில் படகுச் சேவை இடம்பெற்று வருகின்றது.
இன்று (09) காலை 8.30 மணி வரையான கடந்த 24 மணி நேரத்தில் வாகனேரிப் பகுதியில் 45.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், உன்னிச்சைப் பகுதியில் 33.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 22.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், கட்டுமுறிவுப் பகுதியில் 23 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், கல்முனைப் பகுதியில் 25.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.
இதனால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதான குளங்களின் நீர்மட்டங்களும் வெகுவாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 29அடி 3அங்குலம்,
நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 28அடி 8அங்குலம்,
தும்பங்கேணிக் குளத்தின் நீர்மட்டம் 15அடி 9அங்குலம்,
உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 14அடி ஒரு அங்குலம்,
வாகனேரிக் குளத்தின் நீர்மட்டம் 17அடி 5அங்குலம்,
கட்டுமுறிவுக் குளத்தின் நீர்மட்டம் 11அடி 6அங்குலம், கித்துள்வெவக் குளத்தின் நீர்மட்டம் 11அடி 7அங்குலம்,
வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 15அடி 7அங்குலம், வடமுனைக்கு குளத்தின் நீர்மட்டம் 12அடி 6அங்குலம், உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்பாசனப் பொறியியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இயற்கை அனர்த்த நிலைமைகளுக்கான முனிச்சரிக்கை நடவடிக்கையாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்களும், தயர்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் இராணுவத்தினர், கடற்படை உள்ளிட்ட முப்படையினரும், தயர் நிலையில் உள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பானர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை வடகீழ் பருவப்பெயர்ச்சி மழையும் அங்கு தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

