
ஈரானில் போராட்டம் ; 538 பேர் பலி
ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. டிசம்பர் 28 அன்று ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 1.42 மில்லியன் ரியாலாக பதிவானது.
இதனைத் தொடர்ந்து, பொருளாதார நெருக்கடி மற்றும் கடும் விலைவாசி உயர்வுக்கு எதிராக தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மக்கள் மற்றும் வியாபாரிகள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, மத்திய வங்கி ஆளுநர் முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள், அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே நெருக்கடிக்கு முக்கிய காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன.
பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல்கள் வெடித்து வன்முறையாக மாறியதாகவும், இதனால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
போராட்டங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் இணைய சேவைகளை துண்டித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், போராட்டக்காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டதாக கூறப்படும் நிலையில், வன்முறைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 538 ஆக உயர்ந்துள்ளதாகவும், சுமார் 10,600 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


