
23 ஆண்டுகளுக்குப் பிறகு ஈராக் ராணுவ தளங்களில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேற்றம்
ஈராக் ராணுவ தளங்களில் இருந்து சுமார் 23 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறியுள்ளதாக ஈராக் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த 2003 ஆம் ஆண்டு சதாம் உசேன் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் அமெரிக்கா ஈராக் மீது படையெடுப்பு நடத்தியது.
அதனைத் தொடர்ந்து, ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் அமைந்துள்ள அயின் அல் அசாத் விமானப்படைத் தளத்தில் அமெரிக்கப் படைகள் நிலைநிறுத்தப்பட்டன. இவ்விமானத் தளத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க இராணுவம் தங்கியிருந்தது.
2023 ஆம் ஆண்டு ஈராக் அரசாங்கம் விடுத்த அழைப்பின் பின்னர், அயின் அல் அசாத் விமானப்படைத் தளத்தில் இருந்து அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை கட்டுக்கட்டாக குறைத்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது குறித்த விமானப்படைத் தளத்தில் இருந்த அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறியுள்ளதாக ஈராக் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
எதிர்காலத்தில் அமெரிக்காவுடன் ஈராக் கொண்டிருக்கும் உறவு, நேரடி ராணுவ தலையீடுகளுக்கு பதிலாக, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மட்டத்தில் தொடரும் என ஈராக் அரசு அறிவித்துள்ளது.

