குளிர் காலநிலையுடன் வைரஸ் நோய்கள் பரவும் அபாயம் ; சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை

குளிர் காலநிலையுடன் வைரஸ் நோய்கள் பரவும் அபாயம் ; சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை

நிலவும் குளிர்ச்சியான மற்றும் வறண்ட வானிலையுடன் சில வைரஸ் நோய்களின் பரவல் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கம்பஹா வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ரவீந்திர உடகமகே இதுகுறித்து கருத்துத் தெரிவிக்கையில், குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் இவ்வகை வைரஸ் நோய்கள் அதிகமாகப் பதிவாகி வருவதாக தெரிவித்துள்ளார்.

நிலவும் குளிர் மற்றும் வறண்ட காலநிலை காரணமாக, சுவாசத் தொகுதியின் மேற்பகுதியை தாக்கும் வைரஸ்களின் பரவல் அதிகரிக்கக்கூடும் என்றும், முன்பள்ளி வயதுடைய சிறுவர்கள் இதில் அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காய்ச்சல், இருமல், மூக்குத் தடிமன், தொண்டை வலி, கடும் தலைவலி, தசை வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய் அறிகுறிகள் காணப்படக்கூடும் எனவும் தெரிவித்தார்.

இவ்வாறான அறிகுறிகள் மூன்று நாட்களுக்கு மேல் தொடர்ந்தாலோ, அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டாலோ, உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், தற்போதைய நாட்களில் காற்றின் தரம் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன, எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் இந்த நிலைமை சாதாரண நிலைக்கு திரும்பும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )