
2025 ஆம் ஆண்டில் அதிகளவான போதைப்பொருட்கள் மீட்பு
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் மூலம், 2025 ஆம் ஆண்டிலேயே இதுவரை அதிகளவான போதைப்பொருள் தொகையை கைப்பற்ற முடிந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.
“முழு நாடும் ஒன்றாக” என்ற தேசிய நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து இன்று (22) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், 2024 ஆம் ஆண்டில் ஹெரோயின், கஞ்சா, ஐஸ், ஹஷிஸ் மற்றும் கொக்கெய்ன் உள்ளிட்ட மொத்தம் 10,871 கிலோகிராம் போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக குறிப்பிட்டார். அதேவேளை, 2025 ஆம் ஆண்டில் இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் அளவு 23,692 கிலோகிராம் 307 கிராம் ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இது 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் மூன்று மடங்கு அதிகரிப்பாகும் எனவும், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதன் விளைவாக இந்த முன்னேற்றம் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

