
கிழக்கு மாகாண வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு
கிழக்கு மாகாண வைத்தியர்களால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (22) பிற்பகல் 2.00 மணியுடன் நிறைவடைந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.
அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அக்ரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை உடனடியாக அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கான கடிதத்தை சுகாதார அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று நண்பகல் 02.00 மணியுடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, தற்போது கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் நோயாளர் பராமரிப்பு சேவைகள் வழமை போன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

