
பிரசன்ன ரணதுங்கவின் வெளிநாட்டு பயணத் தடை தளர்வு
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை தற்காலிகமாக தளர்த்துவதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (23) கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்போது, சந்தேகநபரான பிரசன்ன ரணதுங்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, மத வழிபாட்டு நடவடிக்கைக்காக இந்தியா செல்ல வேண்டிய அவசியம் இருப்பதால், தற்போது அமலில் உள்ள வெளிநாட்டு பயணத் தடையை தற்காலிகமாக தளர்த்துமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் சார்பில் ஆஜரான உதவி பணிப்பாளர் நாயகம் சுலோச்சனா ஹெட்டியாராச்சி, குறித்த கோரிக்கைக்கு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் உடன்படவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதவான், அடுத்த வழக்குத் தவணை வரை பிரசன்ன ரணதுங்க வெளிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடையை தளர்த்தி உத்தரவிட்டார்.
மேலும், சந்தேகநபருக்கு 50 இலட்சம் ரூபாய் மேலதிக சரீரப் பிணை விதித்த நீதவான், அவரது பிணையாளர்களின் வெளிநாட்டு பயணங்களைத் தடை செய்யவும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு விசாரணை மார்ச் 27ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா அமைச்சின் கீழ் உள்ள நான்கு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட நேரடி மருத்துவக் காப்பீட்டிற்காக, சட்டவிரோதமான முறையில் தனியார் தரகர் நிறுவனம் ஒன்றை நியமித்து, அதன் மூலம் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு 4,750,828.72 ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இந்த வழக்கை முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு எதிராக தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

