அமெரிக்காவில் கடும் பனிப்புயல் தாக்கம்

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் தாக்கம்

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரமான பனிப்புயல் தாக்கி வருகிறது. இந்த பனிப்புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடமேற்கு டெக்சாஸ் மற்றும் ஓக்லஹோமா நகரங்களில் கடும் பனிப்பொழிவு தொடங்கியுள்ள நிலையில், ஓக்லஹோமாவிலிருந்து வடகிழக்கு பகுதிகள்வரை பரவலாக பனிப்பொழிவு தொடரும் என வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திங்கட்கிழமை வரை சில இடங்களில் ஒரு அடிக்கு மேல் பனிப்பொழிவு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பனிப்புயல் பல நாட்கள் நீடிக்கக்கூடும் என்றும், அதிக மக்கள் தொகை கொண்ட மத்திய அட்லாண்டிக் மற்றும் வடகிழக்கு மாகாணங்களை நோக்கி நகர்ந்து, நாடு முழுவதும் கடும் உறைபனி நிலையை உருவாக்கும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெக்சாஸிலிருந்து நியூ இங்கிலாந்து வரை 3,200 கிலோமீட்டருக்கும் அதிக தூரத்தில் பனி மற்றும் உறைபனி பரவக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, 18 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பனிப்புயல் எச்சரிக்கையை அடுத்து, மக்கள் உணவு, பால், முட்டை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அதிகளவில் வாங்கிக் குவித்தனர். இதனால் பல கடைகளில் பொருட்கள் விற்றுத் தீர்ந்து, அலமாரிகள் காலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், பனிப்புயலால் நீண்ட நேர மின்வெட்டு, மரங்களுக்கு பரவலான சேதம் மற்றும் மிகவும் ஆபத்தான அல்லது பயணிக்க முடியாத சாலைப் போக்குவரத்து நிலைமைகள் உருவாகக்கூடும் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்கா முழுவதும் பனிப்பொழிவு காரணமாக விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 1,800-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )