
களுத்துறை போராட்டத்தின் போது நபர் மீது தாக்குதல் ; மாநகர சபை உறுப்பினர் கைது
முன்னாள் அமைச்சர் அஜித் பி. பெரேரா தலைமையில் நேற்று (28) பிற்பகல் களுத்துறை நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, நபர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் களுத்துறை மாநகர சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போராட்டம் நடைபெற்று வந்த இடத்திற்கு அருகில், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வாதுவ – பொத்துபிட்டிய பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது வாகனத்தை நிறுத்தி, “சோறு உண்ணும் மாடுகள் இன்னும் இருக்கின்றனவா?” என கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாநகர சபை உறுப்பினர், குறித்த இளைஞர் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குப் பின்னர், பாதிக்கப்பட்ட இளைஞர் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதேவேளை, தமது அமைதியான போராட்டத்திற்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி, குறித்த மாநகர சபை உறுப்பினரும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட மாநகர சபை உறுப்பினர், பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

