
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்து
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தினசரி சம்பளத்தை 1,750 ரூபாவாக அதிகரிப்பதற்கான ஒப்பந்தம் இன்று (30) கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் இன்று உத்தியோகபூர்வமாக கையெழுத்திடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது, ஜனாதிபதி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1,750 ரூபாய் வரை உயர்த்துவதற்கான தீர்மானத்தை அறிவித்திருந்தார். அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தின் படி, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 1,350 ரூபாவிலிருந்து 1,550 ரூபாவாக, அதாவது 200 ரூபாய் உயர்த்தப்படுவதுடன், வருகை ஊக்கத்தொகையாக மேலும் 200 ரூபாயை அரசாங்கம் வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்த சம்பள உயர்வை அமுல்படுத்துவதற்காக வரவு செலவுத் திட்டத்தில் 5,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

