பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் உண்ணாவிரதம் ; மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் உண்ணாவிரதம் ; மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டு வரும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு உத்தியோகத்தர் இன்று (30) காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 7 ஆண்டுகளாக பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தங்களை, உடனடியாக ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குமாறு கோரி, இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் கடந்த ஜனவரி 26ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்தது.

அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து உரிய பதில் கிடைக்காததையடுத்து, அதே தினம் மாலையே அந்தப் போராட்டம் சாகும் வரையிலான உண்ணாவிரதமாக தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்கின்றது.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த நால்வரில், ஏற்கனவே ஒரு பெண்ணும் மற்றொரு உத்தியோகத்தரும் உடல்நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

மீதமிருந்த இருவரும் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்களில் ஒருவரின் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதையடுத்து, இன்று காலை அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )