
6 லட்சம் மதிப்புள்ள அலங்கார மலர்களுடன் ஒருவர் கைது
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட ரூபாய் 6 இலட்சம் பெறுமதியான அலங்கார மலர் செடிகளுடன் இலங்கை விமானப் பயணி ஒருவர் இன்று (10) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர் தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்வேஸ் விமானம் TG-307 மூலம் இன்று அதிகாலை 12.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த மூன்று பொதிகளை சோதனையிட்ட போது, பிரிலோடென்ட்ரம், அக்லோனெமா, அலோகாசியா மற்றும் மொன்ஸ்டேரா இனங்களைச் சேர்ந்த மொத்தம் 386 அலங்கார மலர் செடிகள் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

