
இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல், இலங்கை மின்சார சபையைக் கலைப்பதற்கான திகதி வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டால், எவ்வித முன்னறிவிப்புமின்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக மின்சார சபை தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இலங்கை மின்சார சபையின் 24 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளின் கையொப்பத்துடன் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் ஒன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மின்சார சபை ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக எட்டு கோரிக்கைகளை உள்ளடக்கிய கடிதம் ஒன்று கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களால் அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும், எனினும் அந்த கோரிக்கைகள் தொடர்பில் இதுவரை எந்தவித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த கோரிக்கைகள் தொடர்பில் மீண்டும் அவதானம் செலுத்துமாறு கோரி நேற்று (09) அமைச்சருக்கு மற்றுமொரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தமது கோரிக்கைகளுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளதால், அவற்றை வென்றெடுப்பதற்காக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர ஊழியர்களுக்கு வேறு வழியில்லை எனவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, கோரிக்கைகளை நிறைவேற்றாது இலங்கை மின்சார சபையைக் கலைப்பதற்கான திகதி வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டால், எவ்வித முன்னறிவிப்புமின்றி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு பொறியியலாளர் சங்கம் உள்ளிட்ட 24 தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

