
குடும்ப கஷ்டம் காரணமாகவே 17 வயதிலேயே வேலைக்கு சென்றவனை அநியாயமாக கொன்றுவிட்டார்கள் ; யாழில் உயிரிழந்த சிறுவனின் சித்தி
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், வாகனத்தை ஓட்டி சென்ற 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அருவி வெட்டு நடவடிக்கைக்காக வேலணைப் பகுதிக்கு வேலையாட்களை ஏற்றிச் செல்லும் நோக்கில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தின் போது வாகனத்தில் சிறுவனுடன் மேலும் இருவர் பயணித்திருந்ததுடன், அவர்கள் இருவரும் அவரது நெருங்கிய உறவினர்கள் என கூறப்படுகிறது.
உயிரிழந்த சிறுவனின் சித்தி ஊடகங்களிடம் தெரிவிக்கையில், குறித்த சிறுவனுக்கு சாரதி அனுமதி பத்திரம் இல்லாத போதிலும், குடும்பத்தின் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக வாகனம் ஓட்டுவதை தொழிலாக மேற்கொண்டு வந்ததாக தெரிவித்தார்.
இதற்காக அவர் பொலிஸாருக்கு கையூட்டுக்களை வழங்கி, அனுமதி பத்திரமின்றி சாரத்தியம் செய்து வந்ததாகவும் கூறினார்.
மேலும், சம்பவ நாளில் தன்னிடம் பணம் இல்லாத காரணத்தால், பொலிஸார் வாகனத்தை மறித்த போது நிறுத்த முடியாமல் பயணத்தை தொடர்ந்ததாகவும், அதனாலேயே பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
“குடும்ப கஷ்டம் காரணமாகவே 17 வயதிலேயே வேலைக்கு சென்றவன். அவனை அநியாயமாக சுட்டு கொன்றுவிட்டார்கள்” என கண்ணீர் மல்க அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மனித உரிமை மற்றும் சட்ட நடைமுறைகள் தொடர்பில் பல கேள்விகளை இந்த சம்பவம் எழுப்பியுள்ளது.
பிரதீபன்

