
அமரகீர்த்தி கொலை வழக்கு ; குற்றவாளிகள் வெலிக்கடை சிறைக்கு மாற்றம்
முன்னாள் இலங்கை பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரியை அடித்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட 12 பேரும் வெலிக்கடை சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட 41 பேரில், 12 பேருக்கு மரண தண்டனை விதித்து கம்பஹா நிரந்தர உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று (11) தீர்ப்பளித்தது.
மேலும், நான்கு பேருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அந்த தண்டனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்ற 23 பேரை நீதிபதிகள் கொண்ட அமர்வு குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்தது
2022 ஆம் ஆண்டு மே 9 ஆம் திகதி, நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று கொண்டிருந்த சூழலில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

