
மெகசின் சிறையிலுள்ள சமன் ஏக்கநாயக்கவை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சந்தித்தார்
மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நேரில் சென்று சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,
தாம் பொதுவாக சிறைச்சாலைகளுக்குச் செல்வதில்லை என்றும், ஆனால் சமன் ஏக்கநாயக்க ஒரு “நல்ல மனிதர் மற்றும் திறமையான நிர்வாகி” என்பதால் அவரைச் சந்திக்க வந்ததாகவும் குறிப்பிட்டார்.
சந்திரிகா பண்டாரநாயக மேலும் தெரிவித்த போது :
“நாட்டை நடத்துவதற்கு திறமையான நிர்வாக சேவை நமக்குத் தேவை” என அவர் கூறினார்.
ஒரு குறிப்பிட்ட கட்சியுடன் அரசியல் ரீதியாக இணங்கிப் போகாத நிர்வாக அதிகாரிகளை இலக்கு வைக்கும் நடவடிக்கை ஜே.ஆர். ஜெயவர்தனவின் அரசாங்க காலத்திலேயே தொடங்கியதாக அவர் குற்றம் சாட்டினார். தற்போதைய அரசாங்கமும் கடந்த கால அரசாங்கங்களின் அரசியல் பழிவாங்கல் போக்கையே தொடர்வதாக அவர் குறிப்பிட்டார்.
பொது நிர்வாக சேவையில் நுழைவதற்கு கணிசமான திறமையும் தகுதியும் தேவை என்பதை சுட்டிக்காட்டிய அவர், சமன் ஏக்கநாயக்க போன்ற அனுபவம் வாய்ந்த நிர்வாகிகளின் சேவை நாட்டுக்கு அவசியம் என்றார்.
இந்தச் சூழ்நிலை குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தவே தான் சிறைச்சாலைக்கு வந்ததாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
“நான் சமன் ஏக்கநாயகவுடன் நெருக்கமாகப் பணியாற்றியுள்ளேன். அவர் மிகவும் நல்லவர்,” என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க மேலும் கூறினார்.

