இராணுவத்துக்கு ரயில் ஓட்டுநர் பயிற்சி மறுப்பு வருத்தமளிக்கிறது ; அமைச்சர் பிமல் ரத்நாயக்க

இராணுவத்துக்கு ரயில் ஓட்டுநர் பயிற்சி மறுப்பு வருத்தமளிக்கிறது ; அமைச்சர் பிமல் ரத்நாயக்க

ரயில்வே துறையின் சில தொழிற்சங்கங்கள் 20 ராணுவ வீரர்களுக்கு ரயில் ஓட்டுநர் பயிற்சி வழங்க மறுத்தமை வருத்தமளிப்பதாகும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அவசரநிலை சூழ்நிலைகளில் இராணுவத்தினருக்கு ரயில் ஓட்டுநர் பயிற்சி வழங்குவது சரியானதும் தேவையானதும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

தொழிற்சங்கங்களின் பணியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்ற எண்ணத்தில் அதற்கு எதிராக போராட்டம் நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்தார்.

மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் உத்தரவு ஒன்றைச் சேர்த்து நடைபெற்ற விவாதத்தின் போது அமைச்சர் இதனை கூறினார்.

நாட்டில் தினசரி சுமார் 280 ரயில்கள் இயக்கப்படுகின்றன என்றும், 20 ராணுவத்தினருக்கு வழங்கப்படவிருந்த பயிற்சியை தவறாக விளக்கி நியாயமற்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சமீபத்தில் ஏற்பட்ட சூறாவளியால் ரயில் பாலம் ஒன்று சேதமடைந்ததை நினைவுகூர்ந்த அமைச்சர், இத்தகைய பாலங்கள் பலவும் ராணுவத்தினரின் பங்களிப்புடன் கட்டப்படுகின்றன என்றார்.

அவசரகாலங்களில் ராணுவத்தின் ஆதரவை நாடும் நிலையில், 20 பேருக்கு அவசர தேவைக்காக பயிற்சி அளிப்பது நியாயமற்றதல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட போது சாதாரண தரப் (O/L) பரீட்சைக்கு தயாராகும் மாணவர்கள் பலிகடாக்களாக பயன்படுத்தப்பட்டதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

இருப்பினும் நிலைமையை கருத்தில் கொண்டு ராணுவத்துக்கு வழங்கப்படவிருந்த ரயில் ஓட்டுநர் பயிற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்து தாம் வருத்தம் தெரிவிப்பதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )