வாழைச்சேனை யில் 5000 ரூபாய் லஞ்சம் வாங்கிய காதி நீதிபதி கைது

வாழைச்சேனை யில் 5000 ரூபாய் லஞ்சம் வாங்கிய காதி நீதிபதி கைது

வாழைச்சேனை கோரளைப்பற்று (மத்திய) காதி நீதிமன்றத்தின் மற்றும் பொலன்னறுவை பதில் காதி நீதிபதியாகக் கடமையாற்றிய ஒருவர், 5,000 ரூபா லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (17) இச்சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாட்டாளரின் மனைவி, பிள்ளைகளுக்கான பராமரிப்புச் செலவு கோரி வழக்குத் தொடர்ந்திருந்தார். பராமரிப்புப் பணம் செலுத்தாத காரணத்தினால், நீதிவான் நீதிமன்றம் முறைப்பாட்டாளருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பித்திருந்தது.

எனவே அந்த திறந்த பிடியாணையை ரத்துச் செய்வதற்காக, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய பராமரிப்பு வழக்கு தொடர்பான விபர அறிக்கையின் சான்றளிக்கப்பட்ட நகலை வழங்குவதற்கு 5,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேக நபர் வாழைச்சேனை 05, அக்பர் பள்ளி வீதியில் அமைந்துள்ள காதி நீதிமன்ற அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேற்கொண்டு வருகின்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )