
இலங்கையின் வான் போக்குவரத்து குறித்த சமீபத்திய நிலவரம்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக பாதிக்கப்பட்ட வான்பரப்புகளைத் தவிர, ஏனைய அனைத்து வான்வழிப் பயணங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
சில வான்பரப்புகள் வரையறுக்கப்பட்ட விமானப் பயணங்களுக்கு மாத்திரமே தற்போது திறக்கப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளுக்கான அனைத்து விமானப் பயணங்களும் இன்று (02) நள்ளிரவு 12 மணி வரை இரத்து செய்யப்பட்டுள்ளன. நள்ளிரவுக்குப் பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும்.
போர்ச் சூழல் காரணமாக பல்வேறு சர்வதேச விமான நிலையங்களில் சிக்கியுள்ள இலங்கையர்களை மிக விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் பயணிகளின் விசா காலத்தை நீடிப்பது உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன, இதனால் அவர்கள் தடையின்றி இலங்கையில் தங்கியிருக்க முடியும்.
இலங்கைக்கு வரவிருந்த கப்பல்களுக்கு இதுவரை எந்தத் தடைகளும் ஏற்படவில்லை என அமைச்சர் உறுதிப்படுத்தினார். மேலும், சில கப்பல்கள் கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களுக்கு வருவதற்கு அனுமதி கோரியுள்ளன. அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

