
மூன்றாவது முறையாக டி20 உலகக் கிண்ணத்தை தன்வசமாக்கியது இந்திய அணி!
2026 டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
இதன் மூலம் உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய கேப்டன்களின் பெருமைமிகு பட்டியலில் சூர்யகுமார் யாதவ் இணைந்துள்ளார்
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (08) நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீர்களான சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா
நியூசிலாந்து பந்துவீச்சை சுக்கு நூறாக உடைத்தனர்.
நியூசிலாந்து பந்துவீச்சை சிக்சர், பவுண்டரி என அபிஷேக் ஷர்மாவும், சஞ்சு சாம்சனும் பறக்க விட்டனர்.
குறிப்பாக அபிஷேக் ஷர்மா 18 பந்துகளில் தன்னுடைய அரை சதத்தை கடந்து அசத்தினார்.
மறுபுறம் சஞ்சு சாம்சன் பொறுப்பும் அதிரடியும் கலந்து ஓட்டங்களை சேர்த்தார்.
பவர் பிளே முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் சேர்த்தது.
சிறப்பாக விளையாடிய அபிஷேக் ஷர்மா 21 பந்துகளில் 52 ஓட்டங்களை சேர்த்தார். இதில் ஆறு பவுண்டரிகளும், மூன்று சிக்ஸர்களும் அடங்கும்.
மறுமுனையில் சஞ்சு சாம்சன் 33 பந்துகளில் அரை சதம் கடந்தார்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 98 ஓட்டங்களை சேர்த்தது.
இந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அடித்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுவாகும்.
இதேபோன்று மூன்றாவது வீரராக களம் இறங்கிய இஷான் கிஷான் தன் பங்கிற்கு பவுண்டரி, சிக்சர் என பறக்க விட 25 பந்துகளில் 54 ஓட்டங்களை குவித்தார்.
சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 89 ஓட்டங்களை சேர்த்து ஜேம்ஸ் நீஷாமின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து போட்டியின் 16ஆவது ஓவரில் ஜேம்ஸ் நீஷாமின் பந்து வீச்சில் சாம்சன், இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்
இது இந்தியாவின் ஆட்டத்தில் சிறிய சரிவை ஏற்படுத்தியது.
அதன் பின் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா பவுண்டரிகளை அடிக்க முடியாமல் தடுமாறினார்.
இதனால் இறுதிக்கட்டத்தில் 16 பந்துகளுக்கு பவுண்டரிகளையே அடிக்காமல் இந்தியா தடுமாறியது.
ஹர்திக் பாண்டியா 13 பந்துகளில் 18 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்க, கடைசி ஓவரின் சிவம் துபே இரண்டு சிக்ஸர், 3 பவுண்டரி என 24 ஓட்டங்களை பதிவுசெய்தார்.
இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 255 ஓட்டங்களை பதிவுசெய்தது.
தொடர்ந்து 256 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கில் நியூசிலாந்து களமிறங்கியது.
அரை இறுதியில் 33 பந்துகளில் சதம் விளாசிய, ஃபின் ஆலன் விக்கெட்டை அக்சர் பட்டேல் ஒன்பது ஓட்டங்களில் வீழ்த்த நியூசிலாந்து அணியின் சரிவு தொடங்கியது.
இதேபோன்று ரச்சின் ரவீந்திரா ஒரு ஓட்டத்தில் பும்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
நியூசிலாந்து அணியின் அதிரடி நாயகனான கிளன் பிலிப்ஸ் 5 ஓட்டங்களில் ஆட்டமிழக்க மற்றொரு ஆரம்ப வீரனான டிம் ஃசெபர்ட் மட்டும் அதிரடி காட்டினார்.
இதனால் நியூசிலாந்து அணி பவர் பிளே முடிவில் 52 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்து தடுமாறியது.
தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் மார்க் சாப்மேன் 3 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, டிம் செபர்ட் 26 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனால் நியூசிலாந்து அணி 72 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியை நோக்கி சென்றது.
இந்த கட்டத்தில் ஆறாவது விக்கெட்டுக்கு டாரல் மிட்செல் மற்றும் அணி தலைவர் மிட்செல் சாண்ட்னர் ஜோடி சேர்ந்து அதிரடி காட்ட முயன்றனர்.
இருப்பினும் மிட்செல் 11 பந்துகளை எதிர் கொண்டு 17 ஓட்டங்களில் அக்சர் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டம் இழக்க ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணியின் தோல்வி உறுதியான நிலையில் கீழ் வரிசை வீரர்கள் எவ்வளவோ முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை.
இதனால் நியூசிலாந்து அணி 159 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
இதன் மூலம் மூன்றாவது முறையாக டி20 உலக கிண்ணத்தை வென்று இந்திய அணி வீரர்கள் சாதனை படைத்தனர்.

