
24 மணி நேர பணிப்புறக்கணிப்பு ; மின்சார சபை ஊழியர்கள் தீர்மானம்
இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களும் சகல சேவைகளிலிருந்தும் விலக தீர்மானித்துள்ளதாக மின்சார சபையின் சுதந்திர ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மின்சார சபையின் “மரண ஊர்வலம்” நடைபெற்ற இன்றைய தினத்திலும் கூட அரசாங்கம் மின்சார சபை ஊழியர்களுக்கு எந்தவொரு சாதகமான பதிலையோ அல்லது கூட்டு ஒப்பந்தத்தையோ வழங்கவில்லை என அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரபாத் பிரியந்த ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக ஆய்வு செய்து கலந்துரையாடல் வழங்கப்படும் வரை பணிக்கு சமூகமளிக்கப் போவதில்லை என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மின்உற்பத்தி நிலையங்கள் மற்றும் அத்தியாவசிய செயல்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும், எனினும் மின்தடை சரிசெய்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் அனைத்தும் இந்த 24 மணி நேர காலப்பகுதியில் நிறுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி தேசிய வைத்தியசாலை, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை மற்றும் இராணுவ தலைமையகம் போன்ற முக்கிய இடங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 25 தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், இந்த தொழிற்சங்க நடவடிக்கை அரசாங்கத்தை அழுத்தம் கொடுக்க அல்ல என்றும், மறுசீரமைப்புக்கு உடன்பட்டாலும் மின்சார சபை ஊழியர்களுக்கு அநீதி விளைவிக்கும் எந்த நடவடிக்கைக்கும் ஒருபோதும் இணங்க மாட்டோம் என்றும் மின்சார சபையின் தேசிய ஊழியர் சங்க செயலாளர் அஜித் தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

