
மத்திய கிழக்கு பதற்றம் ; வெளிநாட்டினரின் விசா 14 நாட்கள் நீடிப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் இராணுவ சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இலங்கையில் தங்கியுள்ள சில வெளிநாட்டினரின் விசாவை 14 நாட்களுக்கு இலவசமாக நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் மோதல்களின் காரணமாக கடந்த 28 ஆம் திகதி முதல் சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டிருந்த சில வெளிநாட்டினர், தங்களின் விசா காலாவதியாகும் முன் இலங்கையை விட்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கடந்த 28 ஆம் திகதி முதல் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டினரின் விசாவை 14 நாட்களுக்கு இலவசமாக நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், அவர்கள் இலங்கையில் சட்டபூர்வமாக தங்குவதற்கு வசதி ஏற்படுவதோடு, மாற்று பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளும் வரை கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்காலத்திலும் இதுபோன்ற விமான ரத்துகள் இடம்பெற்றால், பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சரின் அனுமதியுடன் விசா நீட்டிப்பு காலத்தை மேலும் 14 நாட்கள் வரை இலவசமாக வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

