“ஈரான் ஒருபோதும் பின்வாங்காது”

“ஈரான் ஒருபோதும் பின்வாங்காது”

ஈரானின் புதிய உச்சத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தாபா கமேனி தனது முதல் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கை ஈரான் அரசு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் மூலம் வாசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த அறிக்கையில், அமெரிக்காவுக்கு எதிரான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்றும், மத்திய கிழக்கு நாடுகளில் தாக்குதல்கள் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்தப் பகுதியில் அமெரிக்க இராணுவத் தளங்கள் தொடர்ந்து செயல்பட்டால் அவை தாக்குதலுக்குள்ளாகும் என்றும், அவற்றை விரைவாக மூட வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

“அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டுவோம் என்று அமெரிக்கா கூறியது பொய்யென அவர்கள் இப்போது உணர்ந்திருப்பார்கள். ஈரான் ஒருபோதும் பின்வாங்காது; முழு பலத்துடன் எதிர்க்கும்,” என அவர் தெரிவித்தார்.

தனது தந்தையான மறைந்த அயதுல்லா அலி கமேனியையும், போரில் உயிரிழந்த அனைத்து குடிமக்களையும் நினைவுகூர்ந்த அவர், “அவர்களுக்காக பழிவாங்குவோம்” என்றும் கூறியுள்ளார்.

மேலும், ஈரான் எதிரியிடமிருந்து இழப்பீடு பெறும் என்றும், அது மறுக்கப்பட்டால் அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யவோ அல்லது அதே அளவிற்கு அழிக்கவோ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

“பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு சிறிய பகுதி மட்டுமே இதுவரை தொடங்கியுள்ளது. அது முழுமையாக நிறைவேறும் வரை இதுவே எங்களது முன்னுரிமையாக இருக்கும்,” என்றும் அவர் சூளுரைத்தார்.

“எனது தந்தை எப்போதும் உண்மையைப் பேசியவர். அவரது மரணம் அதனை உறுதிப்படுத்துகிறது. நான் அவரது பாதையில் தொடர்வேன். தியாகிகளின் இரத்தத்திற்குப் பழிவாங்கியே தீருவோம்,” என்றும் மொஜ்தாபா கமேனி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )