
காட்டு மரை வேட்டையாடிய இருவர் விளக்கமறியல்
நோட்டன் பகுதியில் உள்ள ஒஸ்போன் தோட்டத்தின் 50 ஏக்கர் பிரிவில் அமைந்துள்ள வனப் பகுதியில் காட்டு மரை ஒன்றை வேட்டையாடியதாக சந்தேகிக்கப்படும் இருவரை எதிர்வரும் புதன்கிழமை (18) வரை விளக்கமறியலில் வைக்க ஹட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை (11) ஹட்டன் வனவிலங்கு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், ஹட்டன் வனத் துறை அதிகாரிகள், நல்லதண்ணி வனஜீவராசிகள் அதிகாரிகள் மற்றும் நோட்டன் பொலிஸார் இணைந்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது வேட்டையாடப்பட்ட மரையின் இறைச்சியுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 52 மற்றும் 37 வயதுடைய நோட்டன் ஒஸ்போன் பகுதியைச் சேர்ந்தவர்கள் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களிடமிருந்து வேட்டையாடப்பட்ட மரை இறைச்சியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்களை எதிர்வரும் புதன்கிழமை (18) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
மேலும் கைப்பற்றப்பட்ட மரை இறைச்சியை பயன்பாட்டிற்கு உதவாத வகையில் மண்ணெண்ணெய் ஊற்றி புதைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

