
ரணிலுடன் கூட்டிணைவதாக சஜித் அறிவிப்பு
மக்களுக்கான ஒரு நாட்டையும் அரசாங்கத்தையும் கட்டியெழுப்புவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆகியன ஒன்றிணையவுள்ளதாக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மறைந்த சிரேஷ்ட அரசியல்வாதி காமினி திஸாநாயக்கவின்
84-வது பிறந்தநாள் நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்திற்கு முன்பாக உள்ள காமினி திஸாநாயக்கவின் உருவச்சிலை அருகே இந்த நிகழ்வு நடைபெற்றது.
மகா சங்கத்தினர் உள்ளிட்ட சமயத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அங்கு உரையாற்றுகையில் ,
“பொதுஜன முகாமை வலுப்படுத்துவதற்கான காலம் கனிந்துள்ளது. பொதுஜனக் கொள்கையின் அடிப்படையில் அமையவுள்ள ஒரு மாபெரும் கூட்டணியில்ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியும் கைகோர்க்கவுள்ளது.
இறுதியில் பொதுமக்களே வெற்றி பெற வேண்டும்.”
கடந்த சில ஆண்டுகளாகப் பிரிந்து நின்ற இந்த இரு பிரதான அணிகளும் மீண்டும் ஒன்றிணைவதாக அறிவித்துள்ளன .இது இலங்கையின் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, எதிர்வரும் தேர்தல்களை இலக்காகக் கொண்டே இந்த ‘மக்கள் சார்பு’ கூட்டணி உருவாக்கப்படுவதாகத் தெரிகிறது.

