
இஸ்ரேலின் எரிசக்தி அமைப்புகளை அழிப்போம் – ஈரான் கடும் எச்சரிக்கை
ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் ஈரானின் மின் கட்டமைப்பு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தலுக்கு ஈரான் ராணுவம் கடும் பதிலடி கொடுத்துள்ளது.
ட்ரம்ப்பை ஒரு “பயங்கரவாத ஜனாதிபதி” என வர்ணித்துள்ள ஈரான், தனது தாக்குதல் திட்டங்களை பகிரங்கப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் அரச தொலைக்காட்சியில் உரையாற்றிய ராணுவப் பேச்சாளர் இப்ராஹிம் சோல்பகாரி (Ebrahim Zolfaghari), ஹோர்முஸ் நீரிணை தற்போது மூடப்படவில்லை என்றாலும், அது முழுமையாகத் தங்களது கட்டுப்பாட்டில் உள்ளதாக வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா தனது அச்சுறுத்தலைச் செயல்படுத்தினால், ஈரான் தரப்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் எவை என்பதை ஈரான் தெரிவித்துள்ளது.
சேதமடைந்த ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மீண்டும் கட்டியெழுப்பப்படும் வரை ஹோர்முஸ் நீரிணையை எக்காரணம் கொண்டும் திறக்காதிருத்தல்.
இஸ்ரேலின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள், எரிசக்தி மற்றும் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்துதல்.
பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் பங்குரிமை கொண்ட அனைத்து நிறுவனங்களையும் முழுமையாக அழித்தல்.
அமெரிக்க ராணுவத் தளங்களைக் கொண்டுள்ள அண்டை நாடுகளின் எரிசக்தி மையங்களையும் சட்டபூர்வமான இலக்குகளாகக் கருதி தாக்குதல் நடத்துதல் என்பவை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டன.
“ஹோர்முஸ் நீரிணை எதிரிகளுக்கும் தீங்கிழைக்கும் போக்குவரத்துக்கும் மட்டுமே மூடப்பட்டுள்ளது,” என்று கூறிய அவர், பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறும் சாதாரணப் போக்குவரத்திற்கு இன்னும் தடை விதிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

