
ஒலிம்பிக் போட்டிகளில் பாலினப் பரிசோதனைமீண்டும் அமுலில்
2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து பெண் பிரிவில் போட்டியிட ‘உயிரியல் பெண்கள்’ மட்டுமே தகுதியுடையவர்கள் என IOC அறிவித்துள்ளது.
இதன் மூலம் திருநங்கைகள் பெண் பிரிவில் பங்கேற்பது முற்றாகத் தடுக்கப்படுகிறது.
2021-ல் ஒவ்வொரு விளையாட்டு சம்மேளனங்களும் தனித்தனியாக முடிவெடுக்கலாம் என்றிருந்த விதியை மாற்றி, தற்போது அனைத்து விளையாட்டுகளுக்கும் பொதுவான விதியை IOC அமல்படுத்தியுள்ளது.
தகுதியைத் தீர்மானிக்க ‘SRY மரபணு’ (SRY gene) பரிசோதனை நடத்தப்படும். இது எச்சில் மாதிரி அல்லது இரத்தப் பரிசோதனை மூலம் மேற்கொள்ளப்படும்.
“வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே மிகச்சிறிய இடைவெளியே உள்ளது. உயிரியல் ரீதியான ஆண்களுடன் பெண்கள் போட்டியிடுவது நீதியானது அல்ல; சில விளையாட்டுகளில் அது பாதுகாப்பானதும் அல்ல” என்று IOC தலைவர் கிர்ஸ்டி கோவென்ட்ரி தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய விதிமுறை பாலியல் வளர்ச்சி வேறுபாடுகள் கொண்ட வீரர்களுக்கும் பொருந்தும்.
உதாரணமாக, இரண்டு முறை ஒலிம்பிக் தங்கம் வென்ற தென்னாப்பிரிக்காவின் காஸ்டர் செமென்யா போன்ற (XY குரோமோசோம் கொண்டவர்கள்) வீரர்கள் இனி பெண் பிரிவில் போட்டியிட முடியாது.
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இமானே கெலிஃப் (அல்ஜீரியா) மற்றும் லின் யூ-டிங் (தைவான்) ஆகிய குத்துச்சண்டை வீராங்கனைகள் தொடர்பான பாலின சர்ச்சை இந்தப் புதிய முடிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன் திருநங்கைகள் பெண் விளையாட்டுகளில் பங்கேற்பதைத் தடை செய்யும் உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.
IOC-யின் இந்த முடிவு, 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கின் போது அமெரிக்க அரசுடன் ஏற்படவிருந்த மோதலைத் தவிர்த்துள்ளது.
பாலினப் பரிசோதனை முதன்முதலில் 1968 ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டு, கடைசியாக 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு நிறுத்தப்பட்டிருந்த இந்தப் பரிசோதனை தற்போது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

