
மட்டக்களப்பு கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம்
வவுணதீவு பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்த இளம் தாய் ஒருவருக்கு மயக்க மருந்து கலந்த பானத்தை வழங்கிக் கடத்திச் சென்று, அவரது நகைகளை கொள்ளையிட்டதுடன் அவரை கிண்ணற்றில் வீசிச் சென்ற சம்பவம் அண்மையில் இடம்பெற்றிருந்தது.
வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்ற அந்த பெண் தற்போது வீடு திரும்பியுள்ள நிலையில், சம்பவத்தன்று நடந்தவற்றை விபரித்துள்ளார்.
“நான் அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு மட்டக்களப்புக்கு போவதற்காக வவுணதீவு சந்தியில் குழந்தையுடன் பஸ்சுக்கு சென்றிருந்தேன்.
அங்கு பஸ்சுக்கு வயோதிபப் பெண் ஒருவர் காத்துக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் நான் சென்று நின்றேன். அப்போது எங்களுக்கு ஒரு ஆட்டோ வந்தது. நிறுத்தி எங்கே போகப்போகின்றீர்கள் என கேட்டார். அப்போது நான் நகருக்கு என்றேன்.
அப்போது ஆட்டோவில் ஏறுமாறு கேட்டனர். நான் என்னிடம் பணம் இல்லை எவ்வளவு எனக் கேட்டேன் 100 ரூபா என்றனர். அப்போது நான் குழந்தையுடன் ஏறினேன். அதில் அங்கு இருந்த வயோதிபப் பெண்ணும் ஏறினார்.
ஆட்டோ நகரை நோக்கி சென்று கொண்டிருந்தபோது மட்டு போதனா வைத்தியசாலையில் ஆட்டோவில் ஏறிய அந்த வயோதிபப் பெண் இறங்கினார். அப்போது நீங்கள் எங்கே போகப் போகின்றீர்கள் என கேட்டனர். அப்போது நான் சத்தார் புடவைக்கடை வீதியில் விடுமாறு தெரிவித்த நிலையில், அங்கு என்னை கொண்டு சென்று விட்டுவிடும்போது ஆட்டோவில் இருந்த பெண் தான் சாரி எடுக்கப் போவதாகவும் நீங்கள் ஆட்டோவில் வருமாறும் கேட்டார். நான் சரிவருகின்றேன் தான் சத்தார் கடையடியில் காத்திருப்பதாக தெரிவித்தார்.
அப்போது நான் குழந்தையுடன் அங்கிருந்து நகைக் கடைக்கு சென்று ஈடுவைத்த தங்க மோதிரத்தை மீட்பதற்கு 24 ஆயிரம் ரூபா பணத்தை செலுத்தி அதனை மீள் எடுத்துக் கொண்டு அந்த பெண் சொன்ன கடைக்கு முன்னால் வந்தபோது அவர் அங்கு காத்துக் கொண்டிருந்த அந்த பெண்ணை சந்தித்ததும் அவர் ஓட்டோ காரருக்கு தொலைபேசியில் கதைத்தார். அப்போது அவர் மணிக்கூட்டுகோபுரம் பகுதிக்கு கூட்டி வருமாறு தெரிவித்தார்.
நானும் அந்த பெண்ணும் அங்கிருந்து மணிக்கூட்டு கோபுரம் நோக்கி சென்றோம். அவர் எனக்கு பின்னால் வந்தார். அங்கு நின்ற அதே ஆட்டோவில் ஏறிக்கொண்டோம்.
அதன் பின்னர் அங்கிருந்து பொதுசந்தை வீதி ஊடாக சென்று அங்கு ஆட்டோவை நிறுத்திவிட்டு அதில் இருந்து இறங்கி போய்விட்டு 10 நிமிடத்தால் வந்து அங்கிருந்து பிரதான பஸ்தரிப்பு நிலையத்து வீதியால் வவுணதீவு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது வலையிறவு பாலத்தால் சென்று கொண்டிருந்தபோது அந்த பெண் 3 யூஸ் போத்தல் எடுத்துக் கொண்டார். எனது மகளுக்கும் அவவுக்கும் பச்சைகலர் யூஸ் போத்தலை எடுத்து கொண்டு எனக்கு விளாம்பழ யூஸ் தந்தார். அதனை குடித்துக் கொண்டேன். அப்போது வவுணதீவு சந்தியில் அந்த பெண் இறங்கி கொண்டார். அதன் பின்னர் இளைஞன் ஒருவர் அந்த ஆட்டோவில் தாள்கத்தியுடன் ஏறிக் கொண்டார்.
அதன்போது நான் கேட்டேன் என்ன தாள் கத்தியுடன் ஏறுகின்றார் என. அப்போது அவர் வீட்டில் புல்லு இருக்காம் மாட்டுக்கு புல்லு வெட்டுவதற்கு செல்வதாக தெரிவித்துக் கொண்டநிலையில், ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது நான் என்னை தாண்டியடியில் விடுமாறு தெரிவித்தபோது சரி என தெரிவித்துக் கொண்டநிலையில் கன்னங்குடா சந்தியால் சென்று கொண்டிருந்தபோது தாண்டியடி நோக்கி செல்லாமல் பாவற்கொடிச்சேனை பகுதியை நோக்கி பிரயாணித்த போது நான் கேட்டேன் ஏன் இந்த வீதியால் போகின்றீர்கள் என. அப்போது அந்த இளைஞனை கொண்டு சென்று விட்டுவிட்டு உங்களை கொண்டு சென்று விடுவதாக தெரிவித்தார். ஒரு இரு நிமிடங்களில் நான் மயக்கமுற்றேன்.
இந்த நிலையில் வீட்டில் வெள்ளம் ஏறிவிட்டது. கட்டிலில் என்று மேல் நோக்கி பார்த்தபோது வானம் தெரிந்தது. அப்போது என்னடா வானம் தெரியுது என கட்டையில் காலை வைத்து கொண்டு நீரிர் கீழ் நோக்கி ஒரு தரம் மூழ்கினேன். பின்னர் மேல் நோக்கி வந்தேன். இவ்வாறு இரண்டு தடவை செய்தேன் நான் முற்றாக நீரில் நனைந்த நிலையில், மூன்றாம் தரம் மூழ்கி எழும்பி கொண்டு அம்மா அம்மா என சத்தமிட்டேன்.
அதன் பின்னர் கணவரை கூப்பிட்டு சத்தமிட்டேன். அதன் பின்னர் மீன்பிடிக்க போனீர்கள் இவ்வளவு நேரமும் என்ன செய்கின்றீர்கள் என கத்தினேன். அதன் பின்னர் பிள்ளை பிள்ளை என கத்தினேன். அதன் பின்னர் யார் என்று தெரியாது கையில் கயிற்றை இழுத்தனர்” என்றார்.

