
யாழ் பல்கலை விரிவுரையாளர் கொலை ; சந்தேக நபர்கள் மீண்டும் விளக்கமறியலில்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனங்கிளப்பு பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட விரிவுரையாளரின் கொலை சம்பவம் தொடர்பாக, அவரின் மருமகனும் மகளும் முன்னதாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கு நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இரு தரப்பினரும் விரிவான சட்ட சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.
இரண்டாவது சந்தேக நபரான மகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சமந்த அத்துக்கோரள, குடும்பப் பிரச்சினைகள் மற்றும் உடல், உளத் துன்புறுத்தல்கள் காரணமாக மணநீக்கம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக மன்றில் தெரிவித்தார்.
மேலும், அவரது வாக்குமூலத்தை பதிவு செய்ய முன் மனநிலை மதிப்பீடு செய்ய சட்ட வைத்திய அதிகாரியிடம் அறிக்கை கோரவும் விண்ணப்பித்தார்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், வழக்கில் சுயாதீனமான விசாரணை நடைபெற வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.
மேலும், ஊடகங்களில் வெளியான சில தவறான மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சந்தேக நபர்களின் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் வெளியிடப்படுவது சட்டவிரோதமானது என்றும், அவ்வாறான செய்தி வெளியீடுகள் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படலாம் என்றும் மன்றில் குறிப்பிடப்பட்டது.
பொலிஸார் தரப்பில், சம்பவத்துடன் தொடர்புடைய சான்றுப் பொருட்கள் அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மூன்று தரப்புகளின் சமர்ப்பணங்களையும் பரிசீலித்த நீதிவான், சந்தேக நபர்கள் இருவரையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், இரண்டாவது சந்தேக நபரின் மனநிலையை உறுதிப்படுத்தும் அறிக்கையை சமர்ப்பிக்க சட்ட வைத்திய அதிகாரிக்கு பணிப்புரையும் வழங்கினார்.
மேலும், வழக்கின் தன்மையை கருத்தில் கொண்டு ஊடகங்கள் பொறுப்புடன் செய்தி வெளியிட வேண்டும் எனவும், தவறான தகவல்கள் நீதிமன்ற செயல்முறைகளை பாதித்தால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் எனவும் நீதிவான் எச்சரிக்கை விடுத்தார்.
பிரதீபன்

