
திறமையான ஆசிரியர்களை உருவாக்குவதற்காக தேசிய கல்வியியல் கல்லூரிகளை மறுசீரமைக்கும் நிபுணர் குழு நியமனம்
தேசிய கல்வியியல் கல்லூரிகளை மறுசீரமைக்க நிபுணர் குழு நியமனம்
திறமையான மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய தலைமுறை ஆசிரியர்களை உருவாக்கும் நோக்கில், தேசிய கல்வியியல் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்தவும் அவற்றை மறுசீரமைக்கவும் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அரசின் கல்வி மாற்றத்தை அடைவதற்குத் தேவையான தலைமைத்துவப் பண்புகள் மற்றும் திறன்களைக் கொண்ட ஆசிரியர்களை உருவாக்குவதற்கு, இந்த நிறுவனங்களுக்குள் சாதகமான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.
புதிதாக நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களுடன் ஏப்ரல் 2ஆம் திகதி இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் லியனகே அமரகீர்த்தி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் பின்வரும் உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்:
அரோஷ அதிகாராம் – கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர்.
பூபாலசுந்தரம் ஐயங்கரன் -யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
பி. ஏ. டி. அனில் -இலங்கை ஆசிரியர் கல்விச் சேவையின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட விரிவுரையாளர்.
தேசிய கல்விக் கொள்கைக்கு இணங்க, தேசிய கல்வியியல் கல்லூரிகளின் முழுமையான நிறுவனக் கட்டமைப்பை மீளாய்வு செய்யும் பொறுப்பு இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு மற்றும் மாணவர் நலன்புரி வசதிகளை மேம்படுத்துதல், நிர்வாகம் மற்றும் நிலைத்தன்மையை வலுப்படுத்துதல், கற்றல் சூழலை மேம்படுத்துதல், மதிப்பீட்டு முறைகளை சீரமைத்தல் மற்றும் ஆசிரியர்-மாணவர் இடையிலான ஈடுபாட்டை அதிகரித்தல் போன்ற பரிந்துரைகளை வழங்குவது இக்குழுவின் முக்கிய பணியாகும்.
தரமான ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை உறுதி செய்வதில் தேசிய கல்வியியல் கல்லூரிகளின் முக்கிய பங்கைச் சுட்டிக்காட்டிய பிரதமர், ஆசிரியர் பயிற்சித் தரத்தை உயர்த்துவதற்கு இந்த நிறுவனங்கள் குறித்து விரிவான மதிப்பீடு அவசியம் எனக் குறிப்பிட்டார்.
தற்போதைய நிலைமைகளை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கும், சீர்திருத்தங்களை வினைத்திறனாக அமுல்படுத்துவதற்கும் அனைத்து தேசிய கல்வியியல் கல்லூரிகளிலும் விரிவான அவதானிப்புகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் குழுவிற்கு அறிவுறுத்தினார்.
இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் நலக கலுவெவ உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

