
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு ; சி.பி.ஐ. விசாரணைக்காக டெல்லியில் ஆஜராகும் விஜய்
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
சம்பவத்திற்குக் காரணமாக பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததாக கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸ் அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் கட்சியின் 2-ம் கட்ட தலைவர்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் டெல்லிக்கு வரவழைத்து விசாரித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து கட்சித் தலைவர் விஜய் அவர்களுக்கும் இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த 10 ஆம் திகதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது.
எனினும், தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு இருப்பதாகவும், டெல்லிக்கு பதிலாக தமிழ்நாட்டிலுள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணை நடத்த அனுமதி வழங்குமாறும் விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மார்ச் 15 ஆம் திகதி விசாரணைக்காக டெல்லிக்கு வருமாறு சி.பி.ஐ. மீண்டும் சம்மன் அனுப்பியது. இதன்படி, நேற்று தனி விமானம் மூலம் விஜய் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
இன்று (15) காலை 10.45 மணிக்கு விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராக உள்ளார்.
இந்த விசாரணையின்போது, ஏற்கனவே நடைபெற்ற இரண்டு கட்ட விசாரணைகளின் போது கோரப்பட்ட ஆவணங்களை விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தவுள்ளனர்.

