
இன்று இரவு 8 மணிக்குள் உடன்படிக்கைக்கு முன்வராவிட்டால் ஈரான் பாரிய அழிவுக்குள்ளாகும் எச்சரிக்கும் டிரம்ப்உடன்படிக்கையை நிராகரிக்கும் ஈரான்
ஈரானை ஒரே இரவில் அழித்துவிட முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹோமுஸ் நீரிணையை திறப்பதற்காக ஈரானுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று (07) இரவு 8 மணியுடன் நிறைவடைவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமெரிக்க ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இன்று இரவு 8 மணிக்குள் ஏற்றுக்கொள்ளக்கூடிய உடன்படிக்கைக்கு ஈரான் முன்வராவிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக பாரிய அழிவுகரமான தாக்குதல்கள் நடத்தப்படும் என ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.
நள்ளிரவுக்குள் ஈரானின் பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் முற்றாக அழிக்கப்பட்டு, ஈரான் மீண்டும் “கற்காலத்திற்கு” தள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினத்திற்குப் பிறகு ஈரானுக்கு மீண்டும் எந்தவொரு கால அவகாசமும் வழங்கப்படமாட்டாது எனத் தெரிவித்த டிரம்ப், இந்தப் போருக்கு ஆதரவு வழங்காத நாடுகள் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானத்தில் இருந்த இராணுவ வீரரை மீட்பதற்காக முன்னெடுக்கப்பட்ட “பயங்கரமான” தேடுதல் நடவடிக்கை குறித்து அவர் விரிவாக விவரித்ததுடன், அதில் ஈடுபட்ட வீரர்களுக்கு தனது கௌரவத்தையும் தெரிவித்தார்.
இதேவேளை மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தானால் முன்வைக்கப்பட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் நிராகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்காலிக போர்நிறுத்தத்தை விட, போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதே அவசியம் என ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்காக 10 அம்சங்கள் கொண்ட புதிய முன்மொழிவுத் திட்டத்தையும் ஈரான் சமர்ப்பித்துள்ளதாக சர்வதேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன..

