
அன்னை பூபதி நினைவு தினம்
அன்னை பூபதியின் 38வது ஆண்டு 22 நாள் நினைவுதினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஊர்திப்பவனி இன்று (09) ஆரம்பிக்கப்பட்டது.
அன்னை பூபதியின் உருவப்படம் தாங்கிய இந்த ஊர்திப்பவனி, நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் நினைவிட முன்றலில் இருந்து இன்று (09) காலை ஆரம்பமானது.
இந்த ஊர்திப்பவனி தமிழர் தாயகப் பகுதிகளை வலம் வந்து, இறுதியில் மட்டக்களப்பில் அமைந்துள்ள அன்னை பூபதி நினைவிடத்தை சென்றடையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்திய அரசாங்கத்திடம் உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், ஆயுதக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தி, அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளரான அன்னை பூபதி (பூபதி கணபதிப்பிள்ளை) 1988 மார்ச் 19ஆம் திகதி மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
தொடர்ந்து 31 நாட்கள் நடைபெற்ற அந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் முடிவில், 1988 ஏப்ரல் 19ஆம் திகதி அவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதீபன்

